தன் கணவனின் தகாத உறவின் வினையாக, நடந்தது என்ன?, தான் அனுபவித்த சித்ரவதைகள் என்ன? என்பதை மகனுக்கு வாட்ஸ்அப்பில் ஆடியோவாக அனுப்பி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார் சிவகங்கை பெண் ஒருவர்.
"28-12-2022 அன்று அதிகாலை 2.43க்கு எனக்கு போன் வந்தது. எதிர் முனையில் இருந்த தங்கச்சி மகேஸ்வரி யின் கணவன் பாண்டியனோ, "உங்க தங்கச்சி தூக்குப் போட்டு செத்துட்டா..' என ஒத்தை வரியில் தகவலை சொல்லிப் புட்டு வைச்சுட்டாப்ல.! எனக்கோ ஷாக்.!! என்னைய நானே ஆசுவாசப் படுத்திட்டு திரும்பவும் அவனுக்கு போன் செய்து கேட்டாலும் அதே பதில் தான். நானும் என்னுடைய தம்பி களுக்கு தகவல் கொடுத்துட்டு சென் னையிலிருந்து இங்க பார்த்து தங்கச்சி சாவுக்கு பாண்டியன்தான் காரணம்னு புகார் கொடுத்துட் டேன்'' என்றார் தற்கொலையுண்ட மகேஸ்வரியின் அண்ணனான பாலச்சந்திரன். இதேவேளையில், சென்னையிலிருந்து +2 படிக்கும் மகேஸ்வரியின் மகனின் வாட்ஸ் அப்பிற்கு வந்த ஆடியோ பதிவிலோ, "அம்மாவ மன்னிச் சுடுடா.. எனக்கு வேற வழி தெரியலடா. தம்பியை பத்திரமாக பார்த்துக்கோ. உன்ன நம்பித்தான் அவன விட்டுட்டுப் போறேன். ஒழுங்கா படிக்கணும். உன்னோட அப்பாவ நம்பாதடா, என்னோட சாவுக்கு அவருதான் காரணம்டா'' என கண்ணீர்மல்க மகேஸ்வரி பேசியிருந்ததும் தெரியவந்துள்ளது.
"2005ல் தான் இருவருக்கும் திருமணம் நடந்தது. துவக் கத்தில் இருவரும் சென்னையிலிருந்தனர். மாப்பிள்ளை பாண்டியன் அங்கே பைனான்ஸ் கொடுத்து வந்தாப்ல.! அதன்பின் சொந்த ஊரான கருதப்பட்டிக்கு வந்தவர், இங்கேயே வாட்டர் பிளாண்ட் கம்பெனி போட்டு வியாபாரத்தை ஆரம்பிச்சார். மூத்தவன் 12ம் இளையவன் 5ம் படிக்கிறதால, மூத்தவன் படிப்பிற்கு பிறகு கிராமத்திற்கு வரலாமென சென்னையிலேயே தங்கி அண்ணனோட பாதுகாப்பில் குழந்தைகளை படிக்க வைச்சுட்டு இருந்தது மகேஸ்வரி. இங்க பாண்டியனோ தன்னுடைய கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்த ராதிகா என்கிற பெண்ணை வைச்சுட்டு இருந்தது பின்னாளில் தெரியவர, பெரிய அளவில் இருவருக்கும் பிரச்சனையானது. இதனால் ராதிகாவை வேலையை விட்டு எடுத்துட்டாங்க. சமீபத்தில் இந்த சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் சென்னையிலிருந்து வந்த மகேஸ்வரியிடம், "நீ போய் ராதிகாவை வேலைக்கு கூட்டிட்டு வா'' என அடித்து டார்ச்சர் செய்திருக்கின்றான். இது தாங்காமல் அந்த பெண் தூக்கு மாட்டிக்கிச்சு'' என்றார் அவரது உறவினர் ஒருவர்.
தற்கொலைக்குத் தூண்டியதாக பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் சிவகங்கை தாலுகா போலீசார்.
-ஆதித்யா